search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் கொள்ளை"

    திருவாரூர் அருகே ஐகோர்ட்டு வக்கீல் வீட்டில் நகை- பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாமி சுப்பிரமணியன் (வயது 54). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சாமி சுப்பிரமணியன் வீடு அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சாமி சுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    இதனால் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம கும்பல், சாமி சுப்பிரமணியன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியில் இருந்த 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    சிறிதுநேரம் கழித்து கோவிலில் இருந்து வீடு திரும்பிய சாமி சுப்பிரமணியன், தனது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மரப்பெட்டியில் இருந்த நகை- பணம் கொள்ளை போய் இருந்ததை பார்த்து திடுக்கிட்டார். திருட்டு போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுபற்றி அவர் கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாமி சுப்பிரமணியன் கோவிலுக்கு சென்ற நேரத்தில் தான் திருட்டு நடந்துள்ளது. மேலும் கட்டிலுக்கு அடியில் உள்ள மரப்பெட்டியில் நகை- பணம் இருப்பதை நன்கு தெரிந்து கொண்ட நபர்களே இச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். இதனால் சாமி சுப்பிரமணியன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.#Tamilnews
    ×